தூத்துக்குடி மாவட்டத்தின் 28வது புதிய கலெக்டராக இளம்பகவத் இன்று (புதன்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் கலெக்டர் இளம்பகவத், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:தூத்துக்குடி மாவட்டம் பாரம்பரியமிக்க மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் முக்கியமான தலைவர்கள் வாழ்ந்த மாவட்டம் மற்றும் வரலாறு சிறப்பு வாய்ந்த மாவட்டம். இந்த மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மாவட்டத்தினுடைய நலன்களுக்கும், மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்வதுதான் என்னுடைய நோக்கம். குறிப்பாக, அரசுத்துறைகளில் இருக்ககூடிய வளர்ச்சி திட்டங்கள், கல்வி, மருத்துவம், திறன் மேம்பாடு, திறன்மேம்பாடு சார்ந்த வேலைவாய்ப்புபோன்ற துறைகளில் கவனம் செலுத்துவது என்னுடைய முக்கிமான நோக்கமாகும். அதுமட்டுமல்லாமல், அரசினுடைய நலத்திடங்கள் அனைத்தும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதிலும், மாவட்டத்தினுடைய வளர்ச்சி அனைவருடன் உள்ளடங்கிய வளர்ச்சியாக இருக்கவேண்டும். மாவட்டத்தினுடைய வளர்ச்சி பலன்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைவதற்கான முயற்சியை மேற்கொள்வேன் என்றார்.
மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தஞ்சாவூரில் சோழன்குடி என்ற கிராமத்தில் பிறந்தவர். சொந்த கிராமத்தில் ஆரம்பக் கல்வியும், பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். 2014-ம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றிபெற்று மத்திய அரசுப் பணியான ஐ.ஆர்.எஸ் வேலையைப் பெற்றவர். மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, 117-வது ரேங்க் பெற்று, ஐ.ஏ.எஸ். பணியைப் பெற்றவர்.இளம்பகவத் ஐஏஎஸ் ஏற்கெனவே பொது நூலகத் துறை இயக்குநராகவும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் பொறுப்பாளர் ஆகவும் செயல்பட்டு வந்துள்ளார். திருநெல்வேலியில் உதவி ஆட்சியராகப் பணியாற்றி உள்ளார்.