மகளிர்களுக்கான ‘டி-20’ உலக கோப்பை கிரிக்கெட் இன்று துவக்கம்!

- Advertisement -

0

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒன்பதாவது உலககோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற இருந்த நிலையில் அங்கு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்றப்பட்டது. இன்று தொடங்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை வருகிற இருபதாம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. துபாய் மற்றும் சார்ஜாவில் உள்ள மைதானங்களில் இந்த போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. ஒன்பதாவது மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து என மொத்தம் பத்து அணிகள் கலந்து கொண்டுள்ளன. இதில் தலா 5 அணிகள் என மொத்தம் இருக்கும் பத்து அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் லீக் சுற்றில் ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்றுகள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதி போட்டிக்கு முன்னேறும். முதல் அரை இறுதி அக்டோபர் 17-ந் தேதியும், 2-வது அரை இறுதி 18-ந் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 20-ந் தேதியும் நடைபெற உள்ளது.

இன்று நடைபெறும் துவக்க  ஆட்டங்களில் வங்காளதேசம்-ஸ்காட் லாந்து அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதுவரை எட்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து முடிந்து உள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி அதிகபட்சமாக இரண்டு முறை ஹாட்ரிக் சாம்பியன் பட்டத்துடன் ஆறு முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை. ஒருமுறை மட்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. ஹர்மன் ப்ரீத் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.