திருச்சியில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்தில் எஸ்ஆர்எம்யூ மாநில துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்…!
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானம் அருகே உள்ள கீழ் பெட்டிகள் பராமரிப்பு மையத்தில் ரயில் பெட்டிகளையும், அதில் உள்ள கழிவறைகளையும் சுத்தம் செய்வது, மின்விசிறி மற்றும் மின்விளக்குகளை பழுது நீக்குவது, ரயில் பெட்டிகளில் உள்ள இருக்கைகள், பிரேக் மற்றும் இணைப்பு பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்கு ஊழியர்களும், ஒப்பந்த அடிப்படையில் 180 ஊழியர்களும் என 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள்.இங்கு, ரயில்கள் சிறிய அளவிலான பராமரிப்பு பணிக்காக கொண்டுவரப்படுகிறது. இதில் உள்ள 200க்கும் மேற்பட்ட பெட்டிகளை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் 24 நேரமும் ஈடுபட்டு வருகிறார்கள்.
போதுமான ஊழியர்கள் இல்லாத நிலையில், தொடர்ந்து பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு பணிச்சுமையை கொடுத்து, அவர்களில் 12 பேரின் பணியில் உள்ள குறைபாடுகள் குறித்து விளக்கம் கேட்டு (மெமோ), மெக்கானிக்கல் பிரிவின் மண்டல முதன்மை அதிகாரி கிளமண்ட் பர்னபாஸ் கடிதம் கொடுத்துள் ளார்.இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ மாநில துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ஒப்பந்த அடிப்படையில் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினார்கள்.போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களோடு ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு உரியதீர்வு காண ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.