வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் குரூப் Aல் இலங்கை A, ஆப்கானிஸ்தான் A அணிகளும், குரூப் Bல் இந்தியா A, பாகிஸ்தான் A அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.யுஏஇ, ஓமன், வங்காளதேசம், ஹாங்காங் ஆகிய அணிகள் தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறின. அரையிறுதி போட்டியில் இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதே போல் ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இரு அணிகளுக்கிடையேயான இறுதி போட்டி நேற்று அல் அமேரத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஹன் ஆராசிகே 64 ரன்கள் எடுத்தார்.134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதுடன் எமர்ஜிங் ஆசிய கோப்பையையும் வென்று அசத்தியது.