சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய பொன்விழா: ஆந்திராவில் இருந்து தொடரோட்டமாக திருச்சி வந்த ஜோதி!

- Advertisement -

0

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வேளாண்மை அறிவியல் நிலைய பொன்விழாவையொட்டி ஜோதி தொடரோட்டம் நடைபெற்று வருகிறது.இந்தியாவில் முதன்முதலாக 1974 ஆம் ஆண்டு வேளாண் அறிவியல் நிலையம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் 731 வேளாண் அறிவியல் நிலையங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 33 வேளாண் அறிவியல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. வேளாண் அறிவியல் நிலையம் தொடங்கப்பட்டு 50வது ஆண்டு விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக, தமிழ்நாட்டில் முதலாவதாக தொடங்கப்பட்டதும், இந்திய அளவில் இரண்டாவதுமான திருச்சிராப்பள்ளி மாவட்டம், சிறுகமணியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 14.10.2024 அன்று சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளது.

- Advertisement -

அதுசமயம், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், வேளாண்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். மேலும், மாடித்தோட்டம் மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் பற்றிய பயிற்சி மற்றும் மரம் நடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் நமது வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்து நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களுடன் பலதரப்பட்ட மருத்துவ குணங்களைக் கொண்ட காய்கறிகளை நாமே உற்பத்தி செய்யும் விதமாக மாடித்தோட்டம் மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல் பற்றிய தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் தாய்க்காக ஒரு மரம் இயக்கத்தின் ஒரு பகுதியாக மரம் நடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மேலும் தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் பள்ளி சிறுவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளின் அடிப்படையில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
வேளாண்மை அறிவியல் நிலையம் துவங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக பொன்விழா ஆண்டு ஜோதி தொடரோட்டம் ஆந்திர மாநிலம் விஜய நகரத்தில் ஆரம்பித்து 71 வேளாண் அறிவியல் நிலையங்கள் கடந்து நவம்பர் 12ஆம் தேதி புதுச்சேரியில் முடிவடைகிறது. இந்த ஜோதி தொடரோட்டம் திருப்பூர் வேளாண்மை அறிவியல் நிலையத்திலிருந்து சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதை மாவட்ட எல்லையில் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய இணைப் பேராசிரியர்கள் முனைவர் சு.ஈஸ்வரன், முனைவர் எம்.மாரிமுத்து ஆகியோர் திருப்பூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியிடமிருந்து பெற்றுக் கொண்டனர். பின்னர், இந்த ஜோதி தொடரோட்டம் 15.10.2024 அன்று கரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.ராஜா பாபு தெரிவிக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.