சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.2014 முதல் அவர் இங்கிலாந்துக்காக 68 டெஸ்ட், 138 ஒரு நாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஜூன் மாதம் அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாடினார். மொயீன் அலி டெஸ்ட் போட்டிகளில் 5 சதமும் ஒருநாள் போட்டிகளில் 3 சதமும் அடித்துள்ளார். மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் மொத்தமாக 366 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். 2019ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும், 2022ல் டி20 உலகக் கோப்பையையும் வென்ற இங்கிலாந்து அணியில் மொயீன் அலி இடம் பெற்றிருந்தார்.
2022 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 16 பந்துகளில் அரைசதம் அடித்து டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை
அவர் படைத்தார். ஓய்வு பெறுவது தொடர்பாக பேசிய மொயீன் அலி, “எனக்கு 37 வயதாகிறது, இந்த மாத ஆஸ்திரேலிய தொடருக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை. நான் இங்கிலாந்துக்காக நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இது அடுத்த தலைமுறைக்கு வழிவிடுவதற்கான நேரம். தொடர்ந்து லீக் கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாடுவேன். எதிர்காலத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றவும் திட்டமிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.