நாகர்கோவிலில் அலறும் சைலன்சர்கள், அதிரும் ஒலிப்பான்களுடன் வலம் வந்த பைக்கில் கெத்து காட்டும் இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்!

- Advertisement -

0

நாகர்கோவிலில் அலறும் சைலன்சர்கள், அதிரும் ஒலிப்பான்களுடன் வலம் வந்த பைக்குகளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அபராதம் விதித்தனர். 8 பைக்குகளுக்கு ரூ.67 ஆயிரம் அவரை அபராதம் விதிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்கும் வகையில், போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக அதிக வழக்குகள் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் மற்றும் பைக் ரேஸில் ஈடுபடுகிறவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிகளவில் அபராதம் விதிப்பதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதே போல் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பைக், கார் ஓட்டி பிடிபட்டால், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

- Advertisement -

நாகர்கோவில் வெட்டூணிமடம் பகுதியில் டிராபிக் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையின் போது, அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தி வந்த பைக்கை மடக்கினர். இந்த பைக் கலர் மாற்றப்பட்டும் இருந்தது. இந்த பைக்கை ஓட்டி வந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.இதே போல் நேற்று நாகர்கோவில் மாநகரம் முழுவதும் வாகன சோதனை நடத்தினர். அப்போது நம்பர் பிளேட் பொருத்தப்படாமல் ஓட்டி வரப்பட்ட 8 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பைக்குகளை ஓட்டி வந்த இளைஞர்களுக்கு தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், 3 நபர்கள் பயணம் செய்தல், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல், அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள், ஒலிப்பான்கள் (ஹாரன்கள்) பயன்படுத்தியது ஆகிய மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் ரூ. 67 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இதுபோல் குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சந்தனகுமார் தலைமையில் இரணியல் மற்றும் தோட்டியோடு பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

குறிப்பாக 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தான் அதிகமாக சிக்குகிறார்கள். கெத்து காட்ட வேண்டும் என்ற ஆசையில் அதிக வேகமாக, அதிரும் சைலன்சருடன் பைக்குகளில் இவர்கள் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். காவல்துறையின் அதி தீவிர நடவடிக்கையால் அபராதங்கள், பறிமுதல் நடவடிக்கைகள் எடுத்தாலும், கூட பெற்றோர் மனது வைத்தால் தான் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பிள்ளைகள் அடம் பிடிக்கிறார்கள் என்பதற்காக விலை உயர்ந்த பைக்குகளை வாங்கி கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.