திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் மேலப்பாண்டமங்கலம் ஆர்.தயாநிதி நினைவு வித்யாசலா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சமூக செயற்பாட்டாளர் விஜயகுமார் நமது குப்பை நமது பொறுப்பு குப்பை தரம் பிரித்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசுகையில்,ஒவ்வொருவரும் மக்கும் குப்பை ,மக்காத குப்பை அபாயகரமான குப்பையினை தரம் பிரித்து வழங்க வேண்டும். உணவுக் கழிவுகள், காய்கறிகள், இலைகள், உணவுக் குப்பைகள், உலர்ந்த இலைகள், சருகுகள்என இயற்கையாக உள்ள அனைத்து பொருட்களும் மக்கும் பொருளாகும். நெகிழி,பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்டவை மக்காத குப்பை ஆகும். மருத்துவக் கழிவுகள்,மருந்து பாட்டில்கள், ஊசிகள், பேட்டரிகள், பல்புகள், கம்பிகள், பி.வி.சி முதலானவை மக்காத குப்பையாகும்.
வீடுகளில் இருந்து வழங்கப்படும் இயற்கை குப்பை கழிவுகள் மக்கும் குப்பை ஆகும். இவற்றை பச்சை நிற தொட்டியிலும் நெகிழி பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத பொருட்களை நீல நிற தொட்டியிலும் மருத்துவக் கழிவுகள் ஊசி கண்ணாடி உள்ளிட்ட அபாயகரமான பொருட்களை சிவப்பு நிற தொட்டியிலும் ஒரு தொட்டியில் மக்கும் குப்பை, மற்றொரு தொட்டியில் மக்காத குப்பைகள் அளிக்க வேண்டும். உடைந்த கண்ணாடி, மருத்துவக் கழிவுகளை சிவப்பு தொட்டியில் சேகரித்து வைத்து தூய்மைப் பணியாளர்களிடம் அளிக்கும்போது மக்கும் குப்பை மக்காத குப்பை அபாயகரமான குப்பை என தரம்பிரித்து அளிக்க வேண்டும் என்றார். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பாலசுப்ரமணி வரவேற்க, நிறைவாக உதவி திட்ட அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார். வரலாறு, வணிக கணிதம், புள்ளியல் மென்பொருளியல் பாடப்பிரிவு மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.