பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான, ‘சங்கீத கலாநிதி’ விருதை அறிவித்தது. இந்த விருதுடன் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பெயரில் வழங்கப்படும் விருது தொகையான ரூ.1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. பாடகர் கிருஷ்ணாவுக்கு விருது வழங்கும் மியூசிக் அகாடமியின் முடிவு, கர்நாடக இசை கலைஞர்களிடையே கடும் அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த முடிவை விமர்சனம் செய்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ஆங்கில நாளிதழில் கட்டுரை எழுதி இருந்தார்.
கசாப்பு கடைக்காரருக்கு, கருணையே உருவான பகவான் மகாவீரர் பெயரில் விருது வழங்குவதைப் போன்றது என்று விமர்சனம் செய்திருந்தார். மேலும், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியை மிக மோசமாக விமர்சித்தவருக்கு எப்படி அவரது பெயரில் விருது வழங்கலாம் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இதே கேள்வியை எழுப்பி சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியை, டி.எம்.கிருஷ்ணா விமர்சித்த விதத்தை கட்டுரையில் சுட்டிக்காட்டிய குருமூர்த்தி, கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது எனக்கூறியதுடன், மியூசிக் அகடமி இசைப் பாரம்பரியத்தில் இருந்து விலகிப் போவதையே இந்த விருது தேர்வு காட்டுகிறது எனவும் விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த கட்டுரை வெளியான நாள் அன்றே, குருமூர்த்தியை தொடர்பு கொண்ட மியூசிக் அகடமி நிர்வாகம், 2025 ஜன., 14ம் தேதி துக்ளக் ஆண்டு விழாவை அரங்கத்தில் நடத்த வழங்கிய அனுமதியை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளனர். துக்ளக் நாளிதழின் ஆண்டு விழா கடந்த 10 ஆண்டுகளாக மியூசிக் அகடமியில் தான் நடந்து வந்தது.தற்போது அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் இந்த விழா நாரதகான சபாவில் நடக்கும் என குருமூர்த்தி அறிவித்து உள்ளார். விருது தொடர்பான விமர்சனத்திற்கு பழிவாங்கும் வகையில் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.