அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அமைச்சர் கீதாஜீவன் அழைப்பு!
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் வரும் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அவரது திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என மாவட்டச் செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக்கழகத்தை தோற்றுவித்து ஆட்சியில் அமர வைத்தவர் பேரறிஞர் அண்ணா. இந்நிலையில் வரும் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி, வடக்கு மாவட்ட திமுக சார்பில் எனது தலைமையில் அன்றைய தினம் காலை 9 மணியளவில் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட இருக்கிறது. இதில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, வார்டு நிர்வாகிகள், மாநகர வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன்.
மேலும், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக அளவில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்தை வைத்து மலர் அஞ்சலி செலுத்திட வேண்டுமாய் கழக நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.