தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் உள்ளிட்ட 18 நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு தற்போது இயங்கி வருகிறது. 18 முதல் 60 வயதிற்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் உரிய நலவாரியங்களில் தங்களை உறுப்பினராக https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு பெற்ற பிறகு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் பணியிடத்து விபத்து மரணம் முதலான நிதியுதவி கோரி பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டு நிதியுதவித் தொகை தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் சில புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. உணவு மற்றும் வர்த்தக சேவை டெலிவரி செய்யும் இணையம் சார்ந்த தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்த பின் அனைத்து சலுகைகளும் பெற முடியும். வெளிமாநில கட்டுமான தொழிலாளர்களும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் விண்ணப்பித்து உறுப்பினராகலாம். பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் உயர்கல்வி பயில்பவராக இருந்தால் ஆண்டு தோறும் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்கள் 2024- 2025-ம் ஆண்டிற்காக ஆயுள் சான்றினை https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.