இலங்கையில் முதன்முறையாக இடதுசாரி ஆட்சி:அதிபராகும் புரட்சியாளர் அநுர குமார திசாநாயக்க!
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சியை பறிகொடுத்தது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதன் எதிரொலியாக அதிபர் பதவியை ராஜினாமா செய்த கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறினார்.அதன் பின்னர் இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது.எனவே இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய செப்டம்பர் 21-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்தது.அதன்படி இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் 75 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. முதலில் தபால் வாக்குகளும் அதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வந்தன. இதில், இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசாநாயகே முன்னிலை வகித்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசாநாயக அபார வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் நாளை இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.இலங்கையில் நடந்த மக்கள் புரட்சி போராட்டத்திற்கு இவர் முக்கியமான காரணமாக இருந்தார். அங்கே பணத்தின் மதிப்பு சரிந்தது, 16 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு போன்ற விஷயங்களுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை மேற்கொண்டார். இதனால் அவர் மக்கள் இடையே புரட்சி நாயகனாக பார்க்கப்பட்டார்.