தக்காளிக்கு மாற்றாக ‘தக்காளி ஷீட்’டை உருவாக்கிய ஜமால் முகமது கல்லுாரி பேராசிரியை அசத்தல்!
தக்காளி விளைச்சல் குறைந்து, விலை உயர்ந்திருக்கும் போது, சமையலில் பயன்படுத்தும் வகையில் திருச்சி, ஜமால் முகமது கல்லுாரி துணை பேராசிரியர் ‘தக்காளி ஷீட்’ என்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருளை உருவாக்கி அசத்தியுள்ளார்.திருச்சி, ஜமால் முகமது கல்லுாரியில், உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறையின் துணை பேராசிரியராக பணியாற்றி வரும் சங்கீதா, ‘தக்காளி ஷீட்’டை உருவாக்கி, கல்லுாரி முதல்வர் ஜார்ஜ் அமலரத்தினம், செயலர் காஜா நஜ்முதீன், கிரியா நிறுவனர் சிவபாலன், உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறை தலைவர் கவுஸ் பாஷா முன்னிலையில், அறிமுகப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,தக்காளி விலை குறைவாக இருக்கும் போது, அவற்றை வாங்கி சுத்தம் செய்து, தோல் மற்றும் விதைகளை நீக்கி, கூழாக்கி, மென்மையாக அரைத்து சீராகப் பரப்பி, உலர்த்தி தரமான ‘தக்காளி ஷீட்’ கள் தயாரிக்கப்படுகின்றன.விலை உயர்வாக இருக்கும் காலத்தில், அந்த ஷீட்டை துண்டுகளாக்கி சமையலுக்கு பயன்படுத்தலாம். இதனால், இதன் தரம், சுவை, சத்துகள் குறையாது. இந்த தக்காளி ஷீட்டுகளை காற்று புகாத பைகளில் வைத்து, மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். குளிர்பதன பெட்டியில் வைத்து பாதுகாத்தும் பயன்படுத்தலாம்.தக்காளி ஷீட்டுகளை, விவசாயிகள் வீடுகளிலேயே எளிமையாக தயாரிக்கலாம், விற்கலாம்.தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன நிபுணர்கள், இந்த தக்காளி ஷீட்களை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கியது.