ரஷ்ய அரசின் முடிவு காரணமாக 2025ம் ஆண்டில் இந்தியர்கள் விசா இல்லாமலேயே அந்த நாட்டுக்கு பயணிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.கல்வி, தொழில், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் ரஷ்யா செல்கின்றனர். தங்கள் நாட்டுக்கு அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கு சுற்றுலா வருவதை ஊக்குவிக்கும் வகையில், அந்நாட்டு அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, விசா இல்லாமலேயே இந்தியர்கள் ரஷ்யாவுக்கு செல்ல முடியும். அடுத்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து மாஸ்கோ நகர சுற்றுலா நிர்வாக குழு தலைவர் எவ்ஜெனி கோஸ்லோவ் கூறியதாவது,இந்தியர்களுக்கு விசா இல்லாமல் ரஷ்யா வருவதற்கு அனுமதிக்கும் ஒப்பந்தம் தயாராகி வருகிறது.
விரைவில் அது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நீண்ட கால நல்லுறவு காரணமாக, இந்தியாவை மிக முக்கிய சுற்றுலா சந்தையாக ரஷ்யா கருதுகிறது.விசா இல்லாமல் ரஷ்யா வர அனுமதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தால் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். நடப்பு ஆண்டில் இதுவரை 28,500 இந்திய பயணிகள் மாஸ்கோவிற்கு வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1.5 மடங்கு அதிகம். கடந்த ஆண்டில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். இது 2022ம் ஆண்டை விட 26 சதவீதம் அதிகம்.கடந்த ஆண்டு முதல் இந்தியர்களுக்கு இ-விசா வழங்கப்படுகிறது. இத்தகைய விசா விண்ணப்பித்து 4 நாட்களில் வழங்கப்பட்டு விடும். கடந்த ஆண்டு மட்டும் இந்தியர்கள் 9,500 பேருக்கு இ-விசா வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரியில் 1700 விசாக்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.