திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, மாவட்ட தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறை, திருச்சி ரோட்டரி சங்கங்கள் இணைந்து தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்கும் செயல் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் நடத்தினர். நிகழ்ச்சியில் ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரதீபா முன்னிலை வசித்து பேசும்போது, பட்டாசு விபத்துகளினால் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தீபாவளி அன்று மட்டும் ஜோசப் கண் மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் 200 பேர் கண்களில் ஏற்பட்ட தீக்காயங்களுக்காக வந்து முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளார்கள். இதனால் பார்வை இழப்புகள் ஏற்படுகிறது. அதனால் பட்டாசு வெடிக்கும் போது உரிய பாதுகாப்பு செயல்முறைகளை கையாள குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றார்.
பின்னர் நடைபெற்ற பாதுகாப்புடன் கூடிய பட்டாசு வெடிக்கும் செயல் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், கல்லூரி, பள்ளி, மாணவ – மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட தீயணைப்பு அதிகாரி ஜெகதீஷ், தீ விபத்து ஏற்பட்டால் அதற்கு முதலுதவி செய்வது, பட்டாசு எப்படி வெடிக்க வேண்டும் என்பது குறித்து பேசினார். மேலும் குடிசை தீப்பிடித்து எரிவதை தத்ரூபமாக தண்ணீரை பீய்ச்சு அடித்து அணைத்தனர். இதில் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு, டாக்டர் தீபக், ரோட்டரி நிர்வாகிகள் மோகன் குமார், ராமச்சந்திர பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி மாணவ – மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.