போலியான கவர்ச்சி சலுகைகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிரந்தர பட்டாசு விற்பனை கடைகளுக்கு உரிமம் புதுப்பித்து வழங்கப்பட்டுள்ளது. அரியலுார், கடலுார், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் புதுப்பிப்பதில் தாமதம் நிலவுகிறது.ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளன. இருப்பினும் சிலர் விதிமீறி ஆன்லைனில் அதிக சலுகை விலை அறிவித்துள்ளனர். மக்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பட்டாசு வழங்காமல் ஏமாற்ற வாய்ப்பு உள்ளது.
மேலும் சிலர் தரம் குறைந்த பட்டாசுகளின் விலையை உயர்த்தி 90 சதவீதம் தள்ளுபடி என விளம்பரப்படுத்தி விற்கின்றனர். ஆன்லைன் பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறோம். பயணிகள் பஸ்களில் பட்டாசுகளை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். போலியான சலுகை விளம்பரங்களை கண்டு மக்கள் ஏமாறாமல், அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் பட்டாசு வாங்கி பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டுகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன், மாநில துணைத்தலைவர் பிரபாகரன் உடன் இருந்தனர்.