பிரபல மோர்சிங் வாத்திய கலைஞர் ஸ்ரீரங்கம் கண்ணன் நகாலமானார். அவருக்கு வயது(72).கர்நாடக இசை மேடைகளில் பக்கவாத்தியமான மோர்சிங் வாசிப்பதில் பிரபலமாக விளங்கியவர் கண்ணன். 1952 மே 5ம் தேதி ஸ்ரீரங்கத்தில் பிறந்த கண்ணன், பிரபல வித்வான் புதுக்கோட்டை மகாதேவனிடம் தனது 19வது வயதில் மோர்சிங் கற்கத் தொடங்கினார்.மோர்சிங் மற்றும் மிருதங்க வித்வான் கானாடுகாத்தான் ராஜாராமன், மிருதங்க மேதை காரைக்குடி மணி ஆகியோரிடம் லய நுட்பங்கள், தாளக் கோர்வைகளை கற்றார். இசைத் துறை சாராத குடும்பத்தில் பிறந்த இவர், முதல்தலைமுறை கலைஞராக பிரகாசித்தார். கணிதத்தில் பட்டம் பெற்ற ஸ்ரீரங்கம் கண்ணன், வங்கி ஊழியராகவும் பணியாற்றி வந்தார். தனிஆவர்த்தனங்களில் அட்சரம் பிசகாமல் வாசிக்கக் கூடியவர். எம்.பாலமுரளி கிருஷ்ணா, மாண்டலின் ஸ்ரீனிவாஸ், புல்லாங்குழல் மேதை ரமணி உட்பட பல்வேறு மேதைகளுக்கு பக்கவாத்தியம் வாசித்துள்ளார். சக கலைஞர்களான மிருதங்க மேதைகள் டி.கே.மூர்த்தி, உமையாள்புரம் சிவராமன், பாலக்காடு ரகு ஆகியோருடன் இணைந்து வாசித்து அவர்களது பாராட்டையும் பெற்றவர்.
மலேசியாவில் தபேலா மேதை ஜாகிர் உசேனுடன் இணைந்து வாசித்துள்ளார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஸ்ரீரங்கம் கண்ணனை தனியாக அழைத்து மோர்சிங் வாசிக்குமாறு கூறிய மலேசிய மன்னர், அதில் இருந்து வெளிப்பட்ட ஒலியை கேட்டு நெகிழ்ந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.தமிழக அரசின் கலைமாமணி விருது, சிறந்த பக்கவாத்திய கலைஞருக்கான மியூசிக் அகாடமியின் ‘டாக்டர் ராமமூர்த்தி விருது’ (2 முறை), ஸ்ரீராகம் ஃபைன் ஆர்ட்ஸின் ‘மன்னார்குடி நடேச பிள்ளை விருது’ மற்றும் நாரத கான சபா, தியாக பிரம்ம கான சபா உட்பட பல சபாக்களின் விருதுகளை பெற்றவர். அகில இந்திய வானொலி நிலையத்தில் பல நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற பெருமைக்கு உரியவர். அவரது மறைவுக்கு இசை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.