தூத்துக்குடியில் புத்தொழில் மாநாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்!
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய புத்தொழில் மாநாடு, வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், திருநெல்வேலி புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க மண்டல மேலாளர் ராகுல் வரவேற்றார். ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சுவர்ணலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
அவர் பேசியதாவது,தமிழ்நாட்டில் புத்தொழில் மற்றும் புத்தாக்கங்களை உருவாக்குவதற்காக தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் செயல்பட்டு வருகிறது. தென்தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கி திருநெல்வேலியில் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க வட்டார மையம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனமானது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டின் மூன்றாம் நிலை நகரங்களில் தொழில்முனைவு மற்றும் பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதற்காக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடியில் துறைமுகம் அமைந்துள்ளதால், மாவட்டத்தில் அதனை சார்ந்து பிற தொழில் வளர்ச்சிக்கு சிறந்த வாய்ப்பாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் முக்கியமான தொழில் முதலீடுகளில் பெருமளவு முதலீடுகள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தொழில் வளர்ச்சியின் பலன்களை இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
முன்னதாக, வளர்ந்து வரும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் முதற்கட்டமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 15 புத்தொழில் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, ரூ.2.5 லட்சம் மதிப்பிலான மானிய சேவைகளை வழங்கக்கூடிய புத்தொழில் அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பவகத் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நபார்டு உதவி பொதுமேலாளர் சுரேஷ் ராமலிங்கம், துடிசியா தலைவர் தர்மராஜன் மற்றும் இளம் தொழில்முனைவோர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மதர் தெரசா பொறியியல் கல்லூரி இயக்குனர் ஜார்ஜ் கிளின்டன் நன்றி கூறினார்.