விசிக தலைவரை பேஸ்புக்கில் அவதூறு பதிவு செய்தவரை கைது செய்ய கோரி கட்சியினர் புகார்..!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு தகவல்களை பதிவிட்ட நபரை கைது செய்யக் கோரி, அக்கட்சியினா் திருச்சி மாவட்ட எஸ்பியிடம் புகாா் அளித்தனா்.
இது தொடா்பாக கட்சியின் திருச்சி, கரூா் மண்டல செயலா் தமிழாதன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாரிடம் அளித்த மனுவில், சமூக வலை தளங்களில் தொல். திருமாவளவன் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறு தகவல்களை பதிவிட்ட நபரை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் விசிக மாவட்டச் செயலா்கள் லாரன்ஸ், கனியமுதன், இளம்சிறுத்தைகள் பாசறை மாநில துணைச் செயலா் அரசு, நிா்வாகி யாசா் அராபத், பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.