திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான இன்று ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து 3 மணிநேரத்திற்கு பின் தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு, விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.அதன்படி சனிக்கிழமையான நேற்றும், ஞாயிற்றுக்கிழமையான இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வழக்கம்போல இன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு கோபூஜை நடைபெற்றது. தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
பின்னர் 5 மணி முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.அதிகாலை நடை திறக்கும் போதே தரிசன வரிசையில் கூட்டம் நிறைந்திருந்தது. காலை 7 மணிக்கு பிறகு பக்தர்கள் வருகை படிப்படியாக அதிகரித்தது. அதனால், சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. ராஜகோபுரத்தையும் கடந்து தரிசன வரிசை நீண்டிருந்தது. பொது தரிசன வரிசையில் மட்டுமின்றி, ₹50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியதால், அதிலும் 2 மணிநேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.