ஐயப்பன் பாடல் விவகாரம் சம்பந்தமாக பாடகி இசைவானி மீது பாஜக மாநில செயலாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
“ஐ யம் சாரி ஐயப்பா, உள்ள வந்தா என்னப்பா” என்ற பாடலை பாடிய பாடகி இசைவானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பாஜக பிரிவு மாநில செயலாளர் ஜெயராம் பாண்டியன், திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது… நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட “மார்கழியில் மக்களிசை” என்ற நிகழ்வில் கானா பாடகி இசைவாணி என்பவர் பாரம்பரியமாக நாங்கள் நம்பிக்கையுடன் வழிபட்டு வரும் ஐயப்பனை பற்றி பாடல்கள் பாடியுள்ளார். அதில் “ஐ யம் சாரி ஐயப்பா, உள்ள வந்தா என்னப்பா? ” என்று நக்கலாக ஒரு பாடலை பாடியுள்ளார். ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது என்பது எங்களது பாரம்பரிய வழக்கம். அதனை கொச்சைப்படுத்தும் விதமாக, சாதி போன்ற வார்தைகளிட்டு சாதி வெறியை தூண்டும் விதமாக அவரது பாடலும் அவரது நடவடிக்கையும் அந்த மேடையில் உள்ளது.
ஆகையால் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நீலம் புரொடக்ஷன்ஸ் உரிமையாளர் பா.ரஞ்சித் மற்றும் அவரது குழு, ஐயப்பனை கொச்சைப்படுத்தி பாடி எங்கள் மனதை காயப்படுத்திய இசைவாணி ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை தட்டி கேட்டு வீடியோ வெளியிட்ட ஐயப்ப பக்தரான யூடியூபர் தேனி அருண்குமார் என்பவரை கடந்த 25ஆம் தேதி வன்மமாக சிலர் தாக்கியுள்ளனர். அவர்களையும் கைது செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.