தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். பாடும் நிலா என ரசிகர்களால் அழைக்கப்படும் எஸ்.பி.பி., கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி கொரோனாவால் உயிரிழந்தார்.அவரது பண்ணை வீட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு இவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இன்று அவருக்கு 4வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எஸ்பிபி வாழ்ந்த இல்லம் உள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் சூட்டப்படுகிறது. மேலும், “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவைப் ப் போற்றும் வகையில் அவரது இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் முன் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.