2022ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியபோது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்தார். அதன் பிறகு சென்னை அணியின் நிர்வாகம் அவரை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்தது.அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாகவே அவர் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் கரீபியன் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியிருந்த அவர் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஆலோசகராகவும் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் இருந்து விலகி கொல்கத்தா அணிக்காக பிராவோ மாறியது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் பிராவோ இதுகுறித்து “நான் டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி இருக்கிறேன். நான் நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் அந்த அணியை எதிர்த்தும் பல்வேறு தொடர்களில் விளையாடி உள்ளேன். நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகம் என்னை சிறப்பாக கையாண் டார் கள். எனவே இம்முறை நான் அந்த அணியின் நிர்வாகத்திற்காக புதிய பரிமாணத்தை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது அந்த அணியின் ஆலோசகராக செயல்பட இருக்கிறேன். எதிர்வரும் இளம் தலைமுறைக்கு என்னுடைய அனுபவத்தை பகிர தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.