மும்பையில் இருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த, ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், டில்லியில் அவசரமாக தரையிறக்கப் பட்டது. மும்பையில் இருந்து அதிகாலை 2 மணியளவில் ஏர் இந்தியா விமானம் நியூயார்க் புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில், பறந்து கொண்டிருந்த போது வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, விமானம் டில்லிக்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து, பத்திரமாக டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில், சந்தேகப்படும் வகையில் எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். பயணிகள் அனைவருக்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என விமான நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.