அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப், தனது நிர்வாகத்தில் பணியாற்ற உள்ள அதிகாரிகளை நியமித்து வருகிறார்.இந்த நிலையில் அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஜே. பட்டாச்சார்யாவை டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
இதுகுறித்து ஜே.பட்டாச்சார்யா கூறும்போது, அதிபர் டிரம்ப் என்னை தேசிய சுகாதார நிறுவனங்களின் இயக்குநராக நியமித்ததன் மூலம் நான் பெருமையடைகிறேன். பணிவாக இருக்கிறேன். அமெரிக்க அறிவியல் நிறுவனங்களை நாங்கள் சீர்திருத்துவோம். அதனால் அவர்கள் மீண்டும் நம்பிக்கைக்கு தகுதியானவர்கள். அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக மாற்ற சிறந்த அறிவியலின் பலன்களைப் பயன்படுத்துவோம் என்றார்.
ஜே.பட்டாச்சார்யா 1968-ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர். 1997-ம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் பட்டம் பெற்றார். 2000-ம் ஆண்டில் ஸ்டான்போர்டின் பொருளாதாரத் துறையிலிருந்து முனைவர் பட்டம் பெற்றார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சுகாதாரக் கொள்கைப் பேராசிரியராக பணியாற்றினார். அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சித்த இவர், டிரம்ப் பிரசார குழுவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.