ஜமால் முகமது கல்லூரியில் தமிழாய்வுத்துறை சான்லாக்ஸ் பன்னாட்டுத்தமிழியல் ஆய்விதழுடன் இணைந்து நடத்திய பன்னாட்டு கருத்தரங்கம்…!
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தமிழாய்வுத்துறை சான்லாக்ஸ் பன்னாட்டுத்தமிழியல் ஆய்விதழுடன் இணைந்து நடத்திய “தமிழ் இலக்கியங்களில் சமயமும் சமுதாயமும்” எனும் தலைப்பிலான ஒரு நாள் பன்னாட்டுக்கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இப்பன்னாட்டுக்கருத்தரங்கின் தொடக்கவிழாவில் சிங்கப்பூர் சமய நல்லிணக்க ஜாமியாஅறநிறுவனத்தின் மூத்த இயக்குநர் முனைவர் எச்.முஹம்மது சலீம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் சிறப்புரையில் சமயங்களின் சமுதாயப்பணி மக்களைப் பாதுகாப்பது என்று குறிப்பிட்டதுடன் தமிழ் இலக்கியப்பெரு வெளியில் சூஃபி இலக்கியங்களின் பங்களிப்புப் பற்றியும் விவரித்தார் . தொடக்க உரையாற்றிய பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியற்புலத்தலைவர் முனைவர் உ.அலிபாவா தமிழிலக்கிய உலகிற்குச் சமயங்கள் ஆற்றிய அளப்பரிய பணிகளை எடுத்துரைத்தார். அதனைத்தொடர்ந்து ஐந்து அமர்வுகள் நடபெற்றன.
முதல் அமர்வில் கன்னியாகுமரி மாவட்ட கீற்று மாற்று ஊடக இயக்குநர் ஹாமீம் முஸ்தபா, “பீரப்பா பாடல்களில் இறைமை” குறித்தும் அமர்வு இரண்டில்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ச.பொ.சீனிவாசன், ”சங்கச்சமுதாயமும் சமயமும்”
எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினர்.மூன்றாம் அமர்வில் இலங்கைப்பேராதனைப்பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் முனைவர் எம்.எம். ஜெயசீலன் இணைய வழியில் கலந்துகொண்டு பக்தி இயக்கமும் இடைக்காலச்சமூக வாழ்வும் எனும் தலைப்பிலும் , திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரி தமிழ்த்துறை
இணைப்பேராசிரியர்(ப.நி) முனைவர் த .கண்ணா கருப்பையா மகளிர் சமூக வரைவு – இரத்தம் குடிக்கும் தீட்டுத்துணி எனும் தலைப்பிலும் ஐந்தாம் அமர்வில்
திருச்சிராப்பள்ளி புத்தனாம்பட்டி நேரு நினைவுக்கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சோம.இராசேந்திரன் ”பெருஞ்சித்திரனாரின் தமிழ் நெஞ்சம் காட்டும்சமுதாய நிலை”எனும் தலைப்பிலும் உரையாற்றினர். நிறைவு விழாவில் ஐக்கிய அரபு அமீரம் துபாயிலிருந்து இணையவழியில் கலந்து கொண்ட முனைவர் ஆ.முகமது முகைதீன் , திரு முதுவை ஹிதாயத் ஆகிய இருவரும் பன்னாட்டுக்கருத்தரங்கம் குறித்து கருத்துரையை வழங்கினர்.
நிறைவு விழாவில் கருத்தரங்க மதிப்பீட்டுரையை நூலாசிரியர்,திறனாய்வாளர் முனைவர் ந .முருகேசபாண்டியன் வழங்க நிறைவு விழாப்பேருரையைத் தஞ்சை மண்டலக் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் முனைவர் து.ரோசி அவர்கள் வழங்கினார். அவர்தம் உரையில் சமயப்பொறையை வளர்த்த தமிழ் இலக்கியங்களின் சிறப்பினை விளக்கினார்.இப்பன்னாட்டுக்கருத்தரங்கம் நேரிடையாகவும் அதே நேரத்தில் இணையவழியிலும் நடைபெற்றது. 93 ஆராய்ச்சிக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டு ஆராய்ச்சியாளார்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ் நாட்டின்பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் பேராசிரியர்கள் ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை ஐந்து அமர்வுகளிலும் சமர்ப்பித்தனர்.முன்னதாக கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் முனைவர்
அ.கா.காஜா நஜீமுதீன் , பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முகமது ,பொருளாளர் முனைவர் க. அப்துஸ் சமது , ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் முனைவர் கா.ந.அப்துல்காதர்நிஹால் ஆகியோர் இப்பன்னாட்டுக்கருதரங்கினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர்.கல்லூரியின் முதல்வர் முனைவர் து.இ.ஜார்ஜ் அமலரெத்தினம்தலைமையுரையாற்றினார். கருத்தரங்க நோக்கவுரையை இணைப்பேராசிரியர் க.இம்தாதுல்லாஹ் எடுத்துரைத்தார்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அ. சையத் ஜாகீர் ஹசன் தொடக்கவிழாவிலும் ,பகுதி ஐந்து ஒருங்கிணைப்பாளரும் கருத்தரங்க அமைப்பு இணைச்செயலுருமான தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் த.செல்வராசு நிறைவு விழாவிலும் வரவேற்புரை வழங்கினர். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ப.அ.முஹம்மது ஆதில் முர்ஷித் தொடக்க விழாவிலும் கருத்தரங்க அமைப்புச்செயலர் முனைவர் எஸ் .நாகூர் கனி நிறைவுவிழாவிலும் நன்றி கூறினர். இப்பன்னாட்டுக்கருத்தரங்கில் கல்லூரியின் துணை முதல்வர்,கூடுதல் துணை முதல்வர்கள், நிதியாளுநர் துறைத்தலைவர்கள், நூற்றைம்பதற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். விழா ஏற்பாட்டினைத் தமிழாய்வுத்துறையினர் செய்திருந்தனர்.