நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் புஷ்பா 2. இதன் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவாவதற்கு முன்தினம் திரையிடப்பட்டது. இரவு 9.30 மணியளவில் அல்லு அர்ஜுன், அவரது மனைவி மற்றும் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தனர். இதை அறிந்த ரசிகர்கள், அல்லு அர்ஜுனை காண திரையரங்கிற்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஏராளமானோர் மயங்கி விழுந்தனர்.
இதில், 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அனுமதியின்றி சிறப்புக் காட்சி திரையிட்ட சந்தியா திரையரங்கம், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் குழு மீது சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னறிவிப்பின்றி அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்ததாகவும், அவரது பாதுகாப்பு குழுவினர், ஏற்கெனவே குழப்பமான சூழ்நிலையை மோசமாக்கும் வகையில் கூட்டத்தை பிடித்து தள்ளியதாகவும் காவல்துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.மேலும், அல்லு அர்ஜுன் வருகையை முன்கூட்டியே அறிந்திருந்தபோதும் திரையரங்கு நிர்வாகம் போதிய பாதுகாப்பு வசதிகளை செய்யவில்லை என்றும், தங்களது தரப்பில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்றும் காவல்துறை விளக்கமளித்தது.இந்த வழக்கில் தான் தற்போது அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தனது வீட்டில் வைத்து அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த போலீஸார் போலீஸ் வாகனத்தில் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவருடன் திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளரும் கைது செய்யப்பட்டனர்.