தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தலின் பேரில், தூத்துக்குடி வஉசிதம்பரனார் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அதேபோல், சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.