தமிழகத்தில் மாநிலம் முழுவதும் 1,307 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. போலீசாரின் பணி பதிவேடு, புரமோஷன், சம்பளம், வி.ஆர்.எஸ், பணி நீக்கம் போன்ற நிர்வாக பணிகள் அனைத்தும் அமைச்சு பணியாளர்கள் கவனித்து வருகிறார்கள். போலீஸ் பணியை பொறுத்தவரை, காலை 7 மணிக்கு காவலர்கள் பணிக்கு வர வேண்டும்.. அதன்பிறகு போலீசருக்கு ரோல் கால் நடத்தப்படு அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அமைச்சு ஊழியர்களை பொறுத்தவரை, பிற அரசு அலுவலர்களை போல காலை 9.30 மணிக்கு பணிக்கு செல்வார்கள். இந்த நிலையில் தான், காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவது இல்லை என்ற புகார்கள் எழுகின்றன. அதேபோல, சில காவலர்கள் வருகை பதிவேடுகளில் லீவ் எடுப்பதை குறிப்பிடுவது இல்லை என்றும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சென்றதாக கணக்கு காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த நிலையில், இதுபோன்ற புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்க கவல்துறை திட்டமிட்டுள்ளதாம். அதாவது, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் அதிகாரிகளின் அலுவலகங்களில் வருகை பதிவை முறைப்படுத்தும் விதமாக ‘பயோ மெட்ரிக்’ கருவிகள் பொருத்த காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்களாம்.இதற்காக பயோமெட்ரிக் கருவிகள் அனைத்து காவல் நிலையங்களிலும் பொருத்துவது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வாயிலாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை அரசு ஏற்கும் பட்சத்தில் உடனடியாக அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்களுக்கு வருகை பதிவேட்டை பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.