ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாள் : கட்சியினருக்கு தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் அழைப்பு..!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 80 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.இந்தியாவை 21 ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்வேன் என்று உறுதிபூண்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உலகமே வியக்கும் வகையில் ஒப்பற்ற சாதனைகளை நிகழ்த்தினார். தமது 40 ஆவது வயதில் இந்திய நாட்டின் இளைய பிரதமராக பொறுப்பேற்று அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம்.விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் தான் இந்த நாட்டின் வறுமையை விரட்ட உதவும் என்று நம்பியவர். இன்று அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு அன்றே வித்திட்டவர். நாட்டை எதிர்நோக்கியிருந்த பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு திறந்த மனதுடன் பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டவர்.
பாரத ரத்னா, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80 ஆவது பிறந்தநாளான ஆகஸ்ட் 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அவரது திருவுருவப் படத்தை வாகனங்களில் அலங்கரித்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிநெடுக அவரது ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் துண்டு பிரசுரத்தை விநியோகிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்நிகழ்வை மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராமம் என அனைத்து நிலைகளிலும் நடத்தி மறக்க முடியாத மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தியின் நினைவை போற்றுவோம்” என்று கூறினார்.