ஜவுளிக்கடை பணியாளர்களை அழைத்து வந்த வேன் மீது கார் மோதி 15 பேர் படுகாயம் :திருச்செந்தூர் போலீசார் விசாரணை!(வீடியோ )
திருச்செந்தூரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையான சின்னத்துரை அண்ட் கோ கடையில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பணியாற்றி வருகின்றனர். திருச்செந்தூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பணியாளர்களை காலையில் அழைத்துச் செல்வது, பணி முடிந்த பின் இரவு வீடுகளுக்கு சென்று விடுவதற்கான வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று பணிக்கு வந்த பணியாளர்கள் இரவு 10 மணி அளவில் தங்களது பணிகளை முடித்துவிட்டு ஜவுளி கடை வாகனம் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்தனர். இரவு 10.30 மணி அளவில் திருச்செந்தூர் அருகிலுள்ள குமாரபுரம் அருகே இவர்கள் சென்ற வேன் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே ஒரு கார் திருச்செந்தூர் நோக்கி வந்தது. அந்த சமயத்தில் மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத கார் ஓட்டுநர் மாடு மீது கார் மோதாமல் இருக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிரே வந்த ஜவுளி கடை பணியாளர்களை அழைத்து வந்த வேன் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் மற்றும் வேனில் இருந்த பணியாளர்கள் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.தகவலறிந்த திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூரில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.