அமெரிக்காவில் விமானம் நெடுஞ்சாலையில் மோதி இரண்டாக முறிந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று தெற்கு டெக்சாஸின் விக்டோரியாவில் உள்ள ஸ்டேட் ஹைவே லூப் சாலையில் பிற்பகல் 3 மணியளவில் இரட்டை எஞ்சின் ப்ரொப்பல்லர் விமானம் ஒன்று கார்கள் மீது மோதியது.சாலைக்கு மேல் தாழ்வாக பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென சாலையில் செல்லும் 3 கார்கள் மீது மோதி கீழே விழுந்து இரண்டாக முறிந்தது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக விக்டோரியா பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான விமானம் இரட்டை எஞ்சின் பைபர் பிஏ -31 ரகத்தை சேர்ந்தது.விபத்து நடந்தபோது விமானி மட்டுமே விமானத்தில் இருந்துள்ளார். விபத்தில் அவர் உயிர் தப்பிய நிலையில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.