தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்க தெருவில் வசித்து வருபவர் கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. கூலி தொழிலாளியான இவர்களது 2வது மகன் 10வயது கருப்பசாமி. இவர் கடந்த ஒரு வார காலமாக அம்மை நோயினாலா பாதிக்கப்பட்டு இருந்ததால் பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தான். இந்நிலையில் நேற்று கார்த்திக் முருகனும், பாலசுந்தரியும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டிலிருந்த கருப்பசாமி திடீரென மாயமாகி விட்டான்.உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடியும் அவனை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து மாயமான கருப்பசாமியை கண்டுபிடித்து தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாயமான சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காணாமல் போன சிறுவன் கருப்பசாமி, பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்டான்.பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்த சிறுவன் கருப்பசாமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவன் பல மணி நேரத்திற்கு முன்பே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் சிறுவன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் காணாமல் போனதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.