அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியதை அடுத்து நீண்ட காலமாக உயராமல் இருந்த பிட்காயினின் மதிப்பு தற்போது புதிய உச்சத்தை எட்டியது.அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வானதை அடுத்து, ஒரு பிட்காயினின் மதிப்பு 89,623 டாலர்களாக உயர்ந்தது. மேலும் நடப்பாண்டின் இறுதிக்குள் பிட்காயினின் மதிப்பு ஒரு லட்சம் டாலர்களை எட்டி புதிய சாதனையை படைக்கும் என முதலீட்டாளர்கள் பலர் நம்புகின்றனர்.பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குமுறைப்படுத்த அமெரிக்க முழுமைக்குமான ஒருங்கிணைந்த சட்டம் எதுவும் இதுவரை அமலில் இல்லை. அதேநேரம் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசில் கிரிப்டோகரன்சிகளுக்கான சாதகமான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதி அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி ஆகியவை கிரிப்டோகரன்சி தொடர்பான நடவடிக்கைகளை இந்தியாவில் ஒழுங்குமுறைப்படுத்த அதிகாரம் பொருந்திய அமைப்புகளாகும்.இந்தியாவில் கிரிப்டோகரன்சிகள் வைத்திருக்கவும், அவற்றை வாங்குவது, விற்பது போன்ற வணிகத்தில் நடவடிக்கைகளுக்கும் சட்டப்பூர்வமாக எந்தவித தடையும் அமலில் இல்லை. அதேநேரம் கிரிப்டோகரன்சிகள் சட்டரீதியான பணமாக (legal tender) இந்தியாவில் அங்கீகரிக்கப்படவில்லை.
இதனால் பிட்காயின், எதிரியம் போன்ற கிரிப்டோகரன்சிகளை சேவைகளுக்கான கட்டணமாக இந்தியாவில் செலுத்த முடியாது. 2018-ல் கிரிப்டோகரன்சி வணிகத்தை முற்றிலுமாக தடை செய்தது இந்திய ரிசர்வ் வங்கி. ஆனால் மார்ச் 2020-ல் இந்தத் தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்.2022 மத்திய பட்ஜெட்டில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு 30 சதவீத வரி அறிவிக்கப்பட்டது. மேலும் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரத்தைத் தாண்டும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு 1 சதவீத டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.