அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.இதையொட்டி தனது தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசில் யார்? யார்? பங்கேற்க இருக்கிறார்கள் என்பதை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.அந்த வகையில் எப்.பி.ஐ. என அழைக்கப்படும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனராக தனது நம்பிக்கைக்கு உரியவரும், இந்திய வம்சாவளியுமான காஷ் படேலை டிரம்ப் நியமித்துள்ளார்.
இது குறித்து டிரம்ப், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எப்.பி.ஐ-ன் அடுத்த இயக்குனராக காஷ்யப் ‘காஷ்’ படேல் பணியாற்றுவார் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். காஷ் ஒரு சிறந்த வக்கீல் மற்றும் துப்பறிவாளர். மேலும் ஊழலை அம்பலப்படுத்துவதற்கும், நீதியை பாதுகாப்பதற்கும், அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்கும் தனது வாழ்நாளை செலவிட்ட அமெரிக்காவின் முதல் போராளி.எப்.பி.ஐ-க்கு நம்பகத்தன்மை, தைரியம் மற்றும் ஒருமைப் பாட்டை மீண்டும் கொண்டுவர எங்களின் சிறந்த அட்டர்னி ஜெனரல் பாம் பாண்ட்டின் கீழ் காஷ் பணியாற்றுவார்” என குறிப்பிட்டுள்ளார்.