திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். நேற்று 150 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடு தளத்துக்கு சென்று புறப்படத் தயாரானது.அப்போது விமானத்தில் உள்ள வானிலை அறிவிப்புக்கான ரேடார் பகுதியில் தொழில்நுட்ப கோளாறு உள்ளதை விமானி கண்டறிந்தார். உடனே, விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விட்டு, விமானத்தை ஏரோ பிரிட்ஜ் பகுதிக்கு கொண்டு வந்தார். அங்கு பொறியாளர்கள் தொழில்நுட்ப கோளாறை 1½ மணி நேரம் போராடி சரி செய்தனர்.இதையடுத்து, 2 மணி நேரம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதேபோல் ‘பெஞ்–ஜல்’ புயல் காரணமாக சென்னையில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவையும், அதேபோன்று திருச்சியில் இருந்து சென்னைக்கு இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு செல்லும் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.