நாமக்கல்லில் சாதி பெயரில் இயங்கி வந்த பள்ளியை மை பூசி அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் மல்லசமுத்திரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் அரிசன் காலனி என்ற ஏரியா உள்ளது. பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்தப் பள்ளியானது அரிசன் காலனி பள்ளியென நீண்ட காலமாக ஜாதி பெயரை அடையாளமாகக் கொண்டு அழைக்கப்பட்டு வந்தது. இப்படியான நிலையில் இந்த பெயரை எப்படியாவது மாற்ற வேண்டும் என பள்ளியில் படிக்கும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், அப்பகுதி ஊர் மக்கள் என அனைவரும் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று திடீரென பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்றார்.அங்கு பள்ளியின் பெயர் பலகையில் இருந்த அரிசன் காலனி என்ற பெயரை கருப்பு மை பூசி உடனடியாக அழித்தார். அதுமட்டுமல்லாமல் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் என இருந்ததை மல்லசமுத்திரம் கிழக்கு என்று பள்ளியின் முகவரியையும் மாற்றியுள்ளார். மேலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் ஆணைக்கிணங்க பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கி சிறப்பித்தார்.
தொடர்ந்து அரிசன் காலனி என்ற ஊரின் பெயரை மாற்ற போராடி வந்த அப்பகுதியைச் சேர்ந்த பெரியவர் கணேசன் என்பவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் கல்வி மட்டுமே சமத்துவம் மலர செய்யும் மிகப்பெரிய ஆயுதம் என்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி அமைச்சர் அன்பில் மகேஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்