திருச்சியில் கோட்டை ரயில்வே மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உறையூர், தில்லைநகர், பகுதியில் இருந்து வாகனங்கள் அனைத்தும் கரூர் பைபாஸ், தென்னூர் மேம்பாலம் வழியாக மெயின்கார்டுகேட், காந்தி மார்க்கெட், சத்திரம் பேருந்து நிலையம் பகுதியை அடைகின்றன. தென்னூர் பாலம் முடியும் இடத்தில் இருந்து தெப்பக்குளம் வரை சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் பாதியுடன் நிற்பதாலும், காவிரி பாலம் தொடங்கி, காந்தி மார்க்கெட் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் தற்போது ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் புதிதாக கட்டுவதற்காக பழைய பாலம் இடிக்கும் பணி தொடங்கி உள்ளது. இதன் காரணமாக திருச்சி மாநகர் வந்து செல்லும் வாகனங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆங்காங்கே முக்கிய சந்தப்பு, வளைவுகளில் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். இருப்பினும் , போக்குவரத்து நெரிசல் நாள் முழுவதும் நிலவி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த வேளையில் பாலப்பணி தொடங்கி இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி முடிந்த பின்னர் பாலப்பணியை தொடங்கி இருக்கலாம் என்று பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.