நாடு முழுவதுமே தசரா கொண்டாட்டங்கள், நவராத்திரி திருவிழா என உற்சாகமாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்திலும் மக்கள் இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் தொடர் விடுமுறை என்பதால், பல தனியார், அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் நேற்று மாலையே கொண்டாட்டங்களை துவங்கி பூஜை செய்தனர். வீடுகள், தொழில் நிறுவனங்களில், விவசாய கருவிகள் வாகனங்களுக்கு பூஜை செய்து மக்கள் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், கரூரில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் நடுரோட்டில் அந்த வழியே இருந்த மைல் கல்லுக்கு பொட்டு வைத்து பூ வைத்து ஆயுத பூஜை கொண்டா டினார்கள். தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத்துறை தாங்கள் பயன்படுத்தும் ஆயுதம் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ஆயுத பூஜை கொண்டாடினர்.கரூரில் மட்டுமல்லாமல், கோவையிலும் இதே போன்று சிறுவாணி செல்லும் நெடுஞ்சாலையில், மைல்கல்லுக்கு பொட்டு வைத்து, பூ வைத்து, வாழைக்கன்று எல்லாம் கட்டி ஆயுதபூஜைக் கொண்டாடினார்கள். அந்த வழியே நடந்து சென்ற மக்கள், நெடுஞ்சாலையில் மைல் கல்லுக்கு பொட்டு வைத்து பூஜை செய்வதை ஆர்வமுடன் பார்த்தப்படியே நடந்து சென்றனர்.