ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைக்கு, 44 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
‘தீபாவளியை ஒட்டி, சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, மங்களூரு, திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட வழித்தடங்களில், தேவைக்கு ஏற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். கடந்த இரண்டு வாரங்களாக அறிவிக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள், தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற சிறப்பு ரயில்களும் விரைவில் இயக்கப்படும்’ என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வரும் 11ம் தேதி ஆயுத பூஜை, 12ம் தேதி விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இன்றும் நாளையும், அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து இன்று 700, நாளை 2,000 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. முக்கிய நகரங்களில் இருந்து, பிற இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘அரசு பஸ்களில் பயணிக்க, சென்னையில் 25,000 பேர் என மொத்தம், 45,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்’ என்றனர்.