திருவெறும்பூரில் மதுபான கடைகளை அகற்ற கோரி இந்திய மாணவர் சங்கம் சாலையில் பிணமாக படுத்து போராட்டம்!
திருவெறும்பூர் ஐடிஐ மற்றும் துவாக்குடி அரசு கலைக்கல்லூரி எதிரே செயல்படும் அரசு மதுபான தடைகளை மூடக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகே திருச்சி தஞ்சை சாலையில் பிணமாக படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் வைரவளவன் தலைமை வகித்தார். போராட்டத்தில் திருவெறும்பூர் ஐடிஐ எதிரில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையால் ஐடிஐ மாணவர்கள் மது பழக்கதிற்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்படுவதால் அரசு ஐடிஐ முன்பு உள்ள அரசுமதுபானக்கடை மற்றும் பார் உடனடியாக மூட வேண்டும்.

அதேபோல் துவாக்குடிமலை அரசு கலைக் கல்லூரிக்கு எதிரே திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மதுபான கடையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் சங்கத்தினர் ஊர்வலமாக திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பிணமாக படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலை போக்குவரத்து 15 நிமிடம் பாதிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர் ஜி கே மோகன் உள் பட பலர் கலந்து கொண்டனர்.