காந்தியும்… திருச்சியும்….

- Advertisement -

0

தமிழர்களை நேசித்த காந்தி திருச்சிக்கு 6 முறை வந்துள்ளார். தமிழ்நாட்டில் அவர் இருந்த 203 நாள்களில் திருச்சியில் 13 நாள்கள் அவர் தங்கி பயணித்துள்ளார்.
முதன் முதலில் அடிகளின் காலடி திருச்சியில் பட்டது 25-09-1919ம் ஆண்டு. நங்கவரம் மிராசுதார் சுப்புராமய்யரின் சிந்தாமணி இல்லத்தில் தங்கினார். பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசினார்.2-ம் முறை 17-08-1920ல் வந்தார். திருச்சி பாலக்கரையில் தொடங்கி பெரிய ஊர்வலமாக அவர் அழைத்து செல்லப்பட்டார். மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் சௌக்கில் நடந்தது. இன்றைய டவுன்ஹால் எதிரேயுள்ள பழைய புத்தகக்கடைகளை ஒட்டிய பெரிய மைதானமே சௌக். இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

- Advertisement -

18-09-1921ல் 3 நாள் பயணமாக 3-ம் முறை வந்தார். இந்தப் பயணத்தின்போதுதான், தமிழ்நாட்டின் வரலாற்றில் நிர்வாக ரீதியாக காந்தியை வரவேற்ற முதல் நகராட்சி என்னும் பெருமையை திருச்சி பெற்றது. 19-09-1921 பெரிய பொதுக்கூட்டம் இரவு 8 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு அண்ணலின் உரையோடு முடிந்தது.
17-09-1927ல் மீண்டும் திருச்சிக்கு வந்தார். வார சந்தை நடைபெற்ற இடத்தில் நகராட்சி சார்பில் மார்க்கெட் கட்டுவதற்கான அடிக்கலை நாட்டினார். அதுவே தற்போதையா காந்தி மார்க்கெட். மாலை பொன்மலையில் ரயில்வே தொழிலாளர் சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மாலை லால்குடியில் பொதுக் கூட்டம். கொள்ளிடம் பாலம் பழுதாகி இருந்ததால் ஆற்றைக் கடக்க மாட்டு வண்டி வந்தது. அடிகளோ ஆற்றில் இறங்கி நடந்தே கடந்தார். அதற்கும் அடுத்த நாள் காந்தி தேசியக் கல்லூரியில் கூடியிருந்த திருச்சி நகர மாணவர்களை சந்தித்தார். நல்ல தொகையொன்றை அடிகளிடம் நிதியாக தந்தார்கள். பிறகு புத்தூர் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் கிறித்தவ மக்களை சந்தித்தார். அன்று நடக்க வேண்டிய பொதுக்கூட்டம் கனமழையால் ரத்தாகி அடுத்த நாள் காலையில் நடந்தது.

அதன் பின்னர் 10-02-1934-ல் சோழவந்தானிலிருந்து அதிகாலை திருச்சி வந்து சேர்ந்தார். ஸ்ரீரங்கத்தில் இருந்து பிச்சாண்டார் கோயில் வழியாக மணச்சநல்லூர் சென்றார். தொடக்கப் பள்ளி மாணவர்கள்கூட நிதி திரட்டித் தந்தார்கள். அங்கிருந்து சமயபுரம் சென்றார். பிறகு அதிகமாகக் கூடியிருந்த பெண்களிடம் நகைகளை நிதியாகப் பெற்றார். பிறகு தேசியக் கல்லூரி சென்றார். பெரும் மாணவர் கூட்டம். ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசினார். அந்த மரத்தின் நிழல் இன்றும் நினைவு நிழலாக குளிர்கிறது.2-2-1946. காந்தியடிகள் திருச்சிக்கு வந்த கடைசிப் பயணம் இதுதான். திருச்சி ரயில் நிலையத்தில் மட்டும் 2 லட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.
காந்தி அடிகளின் பிறந்த நாளை அக்டோபர் 2-ல் கொண்டாடுவதுபோல், காந்தி அடிகள் திருச்சிக்கு வந்த நாள்களில் ஏதாவது ஒன்றை ‘காந்தி நாளாக’ திருச்சி மக்கள் கொண்டாடலாம். அவரை நகராட்சி வரவேற்ற செப்டம்பர் 19 அதற்கு பொருத்தமாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.