தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் மாநில மாநாட்டில் சமூக செயற்பாட்டாளர்க்கு விருது!
தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் 22 வது மாநில மாநாடு தஞ்சை கீழவாசல் அண்ணா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தலைவர்டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில், உலகத் தமிழர் பேரவை நிறுவனர் பழ.நெடுமாறன் முன்னிலையில் நடைபெற்றது. மயான பூமியில் மனைவி, மகளுடன் ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்துவருவது மட்டுமின்றி, அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம், பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம் வைத்துள்ளதைப் பாராட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன்,திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கினார்.
இது குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,ஆதரவற்ற அனாதை பிரேத நல்லடக்க பணியினை மனைவி, மகளுடன் செய்யும் போது பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னைப் பொறுத்தவரை இது ஒரு புனிதப் பணியாக நான் கருதுகிறேன். இவர்களுக்கு மரியாதை செய்ய ஆளில்லை,மலர்மாலை அணிவிக்க யாருமில்லை, இறுதி ஊர்வலத்திற்கு யாருமில்லை. பிரேதத்திற்கு வாய்க்கு அரிசி போட ஆளில்லை.இறந்த நபருக்கு ஒரு மகன் இருந்தால் ஒரு மகள் இருந்தால் ஒரு பேத்தி இருந்தால் என்ன செய்வார்களோ அந்த காரியத்தை நாங்கள் செய்கிறோம்.கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது பல உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம். மேலும் இருபத்தைந்து முறைக்கு மேல் குருதிக்கொடை அளித்துள்ளேன். வாழ்நாளிற்கு பிறகு படமாய் இருப்பதை விட பாடமாய் இருப்போம் என எனது உடலினை தானமாக வழங்க உறுதியேற்று மனைவி மகள் ஒப்புதழுடன் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்துள்ளேன் என்றார்.