நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நடிகர் விஜய்யின் குறிக்கோளாக உள்ளது.சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார்.இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியின் தொடக்கத்தை எழுச்சி ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமான முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். மாநாடு நடத்துவதற்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ‘வி.சாலை’ என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இங்கு மாநாடு நடத்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர்கள் 21 கேள்விகள் கேட்டு புஸ்சி ஆனந்துக்கு கடிதம் அனுப்பினார்கள். அவரும் பதில் கடிதம் கொடுத்தார்.இதனைத் தொடர்ந்து மாநாட்டுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டது. விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ் இதற்கான அனுமதி கடிதத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவரும்,விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருமான பரணி பாலாஜி, வக்கீல் அரவிந்த் ஆகியோரிடம் வழங்கினார்.