டி.வி.சோமநாதன் கேபினட் செயலாளராக நியமிக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, தற்போதைய டிஐபிஏஎம் செயலாளரான துஹின் காந்தா பாண்டே, கேபினட் கமிட்டியால் புதிய நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த ஐஏஎஸ் அதிகாரியான துஹின் காந்தா பாண்டே புதிய நிதிச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியானது.
பாண்டே, கடந்த 1987-பேட்ச் இந்திய நிர்வாக சேவை (IAS) ஒடிசா கேடரின் அதிகாரியாக பதவியேற்றார். முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை (DIPAM) செயலாளராக பணியாற்றி வந்தார்.பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, பாண்டேவை நிதிச் செயலாளராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மாதம் கேபினட் செயலாளராக டி.வி.சோமநாதன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த பதவி காலியானதை அடுத்து பாண்டே புதிய நிதிச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.