அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனம், பி.எஸ்.என்.எல்., கடந்த மூன்று ஆண்டுகளில் தனது கடனைக் குறைப்பதில் முன்னேற்றம் அடைந்துள்ளது.ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் போன்ற முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல்., சேவைக்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதற்குத் தகுந்தபடி, பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் குறைந்த விலையில் திட்டங்களை வழங்குகிறது.கடந்த காலங்களில் இருந்த கடன் தொகையை குறைப்பதில், பி.எஸ்.என்.எல்., கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.இது குறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு, கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி கடன் ரூ.40,400 கோடியாக இருந்தது. 2 ஆண்டுகளில், கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி ரூ.23,297 கோடியாக குறைந்துள்ளது.2025-26ம் நிதியாண்டில் ரூ.28,476 கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்துள்ளது. கடனைக் குறைப்பதுடன், பல ஆண்டுகளில் முதல் முறையாக, நிறுவனம் அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் கண்டுள்ளது.இந்தஆண்டு செப்டம்பர் மாதம் 8 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். 4G மற்றும் 5G சேவைகளை இன்னும் முழுமையாக வெளியிட வில்லை. அக்டோபர் 31ம் தேதி 2024ம் ஆண்டு வரை மொத்தம் 50,708 4G தளங்கள் நிறுவப்பட்டுள்ளன.ஏற்கனவே, 41,957 தளங்கள் செயல்படுகின்றன. 5ஜி சேவையை அறிமுகப்படுத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பி.எஸ்.என்.எல்., மீட்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.