திருச்சி உறையூரில் ஆன்லைனில் ஆர்டர் செய்து பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேர் கைது!
திருச்சி உறையூரில் உள்ள தனியார் பள்ளி அருகே மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக உறையூர் இன்ஸ்பெக்டர் ராமராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற வடவூரை சேர்ந்த பிரசாத் (வயது 35), சாலை ரோட்டை சேர்ந்த ரியாஸ்கான் (23) மற்றும் உறையூரை சேர்ந்த இர்பான் (23) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி, அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 11 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, பிடிபட்ட 3 பேரும் மற்றும் அவர்களது நண்பர்களும் சேர்ந்து டாக்டர்களின் கையெழுத்து மற்றும் சீல் ஆகியவற்றை போலியாக போட்டு பிரபல ஆன்லைனில் இந்த மாத்திரை ஒன்று ரூ.7 வீதம் வாங்கியுள்ளனர். தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர் களை குறி வைத்து போதை மாத்திரை விற்றுள்ளனர். இந்த மாத்திரைகளை ஒன்று ரூ.300-க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் போட்டுக்கொள்கின்றனர். இதன் மூலம் ஒரு விதமான மயக்க நிலை ஏற்படுகிறது இதனால் நீண்ட நேரம் தூங்குவார்கள். எனவே, பெற்றோர்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது கட்டாயம். போதை மாத்திரை விற்பனை விஷயத்தில் மேலும் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது என்றனர்.