கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.இதில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் ஆர்.சுதா, சிபிஎம் சார்பில் வாசுகி, சிபிஐ சார்பில் ஆனி ராஜா, மதிமுக சார்பில் ரொஹையா ஷேக் முகமது,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ஏ.எஸ்.ஃபாத்திமா முசபர், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஷான் ராணி ஆலிமா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முத்துலட்சுமி வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக அரசு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என விசிக துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும்.மதுவிலக்கை அமல்படுத்தும் மாநில அரசுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி அளிக்க வேண்டும்.மது விலக்கி னால் பாதிக்கப்படும் மாநிலத்திற்கு கூடுதல் நிதியளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுவால் மனித வளம் பாதிக்கப்படுவதால் மதுவிலக்கு விசாரணை ஆணையம் கொண்டு வர வேண்டும்.மதுவிலக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும்.மது ஒழிப்பிற்கான விழிப்புணர்வு இயக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.அரசியலமைப்பு சட்டம் 47ல் கூறியபடி மதுவிலக்கிற்கான சட்டத்தை இயற்ற வேண்டும்.குடி நோயாளிகளுக்கு நச்சு நீக்க சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய மையங்களை அரசு அமைக்க வேண்டும்.மது மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கு மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைக்க வேண்டும். டாஸ்மாக் மது விற்பனை ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்.தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும். இதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மதுக்கடைகளை மூடிவதற்குரிய கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும், மது விலக்கு விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும். மதுவிலக்கு பரப்புரை இயக்கத்தில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும். மது மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடு தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கேடாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்துவதும், பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பதும் அரசின் பொறுப்பு மட்டுமல்ல. அனைத்து தரப்பினரின் முதன்மையான கடமை ஆகும்.
மாநாட்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், மேடையில் கொள்கை விளக்கப் பாடல்கள் பாடப்பட்டது. அப்போது மாநாட்டுத் திடலில் திரண்டிருந்த பெண்கள் ஆட்டம், பாட்டம் என ஆர்ப்பரித்தனர்.